×

சத்தியமா கனவில் கூட நினைத்தது இல்லை: ஜூனியர் சாம்பியன் சமீர் உற்சாகம்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி அமெரிக்க வீரர் சமீர் பானர்ஜி, ‘விம்பிள்டன் ஜூனியர் பிரிவில் சாம்பியனாவேன் என சத்தியமாக கனவில் கூட நினைத்தது இல்லை’ என்று கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் சக அமெரிக்க வீரர் விக்டர் லிலோவுடன் மோதிய சமீர் பானர்ஜி (17 வயது) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இந்த வெற்றி குறித்து சமீர் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்ததால், விம்பிள்டனில் 2வது சுற்றுக்கு முன்னேறினால் போதும் என்றே நினைத்தேன். சத்தியமாக சாம்பியன் பட்டம் வெல்வேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. இதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை.

நான் அமெரிக்காவை சேர்ந்தவன் என்றாலும், இந்தியாவுடனான எனது தொடர்பு இப்போது பெருமை அளிப்பதாக உள்ளது. லியாண்டர் பயஸ் எனக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் ஊக்கசக்தியாகவும் இருந்து வருகிறார். ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களின் வரிசையில் எனது பெயரும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்முறை டென்னிஸ் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு முன் கல்லூரிப் படிப்பு உள்ளது’ என்றார்.
சமீரின் தந்தை அசாம் மாநிலத்தையும், தாய் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள்.

1980களில் அமெரிக்காவில் குடியேறி, அங்கேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர். அமெரிக்காவில் பிறந்த சமீர், 2015ல் கொல்கத்தா வந்திருந்தபோது சவுத் கிளப் வளாகத்தில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். கொல்கத்தாவின் மீன் வறுவலும், ரசகுல்லாவும் சமீருக்கு மிகப் பிடிக்குமாம். டென்னிஸில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டு கொலம்பியா பல்கலை.யில் பொருளாதாரம் அல்லது அரசியல் அறிவிவியல் இளங்கலை பட்டப் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள சமீருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஜூனியர் பிரிவில் பட்டம் வென்ற இந்திய சாதனையாளர்கள்: ராமநாதன் கிருஷ்ணன் (விம்பிள்டன் 1954), ரமேஷ் கிருஷ்ணன் (பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் - 1979), லியாண்டர் பயஸ் (விம்பிள்டன் 1990, யுஎஸ் ஓபன் 1991), யுகி பாம்ப்ரி (ஆஸி. ஓபன் 2009), சமீர் பானர்ஜி (விம்பிள்டன் 2021).

Tags : Sameer , Wimbledon Grand Slam tennis, junior champion Samir
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்